search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரு நீதிபதிகள் நியமனம்"

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் அமர்வில் இன்று இரு நீதிபதிகள் நியமிக்கப்பட்டதால் 29-ம் தேதி முதல் விசாரணை தொடங்கவுள்ளது. #justiceAbdulNazeer #justiceAshokBhushan #Supremecourt #Ayodhyabench
    புதுடெல்லி:

    உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய வழிபாட்டுத்தல நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. 

    இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. 
     
    இந்த வழக்குகளை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அயோத்தி நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் புதிய அமர்வுக்கு மாற்றப்படும் என்று நீதிபதிகள் அறிவித்து விசாரணை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    இந்த வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது. இந்த அமர்வில் ரமணா, லலித், பாப்தே, சந்திரசூட், யூ.யூ.லலித் ஆகிய நீதிபதிகளும் இடம்பெறுகின்றனர்.



    இந்த அமர்வு ஜனவரி 10-ம் தேதி முதல் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
    கடந்த 10-ம் தேதி 5 நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வின் முன்னர் அயோத்தி வழக்கு விசாரணைக்கு வந்தது. 

    அப்போது, இவ்வழக்கில் ஒருதரப்பான முஸ்லிம் இயக்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தாவான், ‘இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதிகளில் ஒருவரான யூ.யூ.லலித் கடந்த 1994-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி கல்யாண் சிங் சார்பில் ஆஜரானவர்’ என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் சுட்டிக்காட்டினார்.

    அதனால், இந்த அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் இருந்து அவரை விடுவிக்க வேண்டும் என நான் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    இதைக்கேட்ட நீதிபதி யூ.யூ.லலித் ’இந்த அமர்வில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்’ என உடனடியாக தெரிவித்தார். அவரது கோரிக்கையும் ஏற்கப்பட்டது. இதையடுத்து, இந்த அமர்வு இன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

    அயோத்தி வழக்கை விசாரிக்கும் அமர்வில் நீதிபதிகள் அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் இன்று நியமித்துள்ளார். 

    இதைத்தொடர்ந்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அஷோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோரை கொண்ட இந்த புதிய அமர்வு வரும் 29-ம் தேதியில் இருந்து அயோத்தி வழக்கை விசாரிக்க தொடங்குகிறது. #justiceAbdulNazeer #justiceAshokBhushan #Supremecourt #Ayodhyabench
    ×